கால சுழற்சி...!

| July 24, 2013 | |
ப்ரியமுள்ள வில்சனுக்கு,

எப்படிடா இருக்க? உனக்கென்ன அழகா வில்சன்னு ஒரு பேர் வச்சு வருஷம்தவறாமல் ரெனிவல் பண்ணிடறேன் சான்ஸ்கிடைக்கும் பொழுதெல்லாம் உன்னை வந்து பிரவுசிங் செண்டர்லயோ இல்லை ஓசி நெட்லயோ பார்த்துட்டு போயிடறேன் அதனால உனக்கொன்றும் வராது வரவும் விடமாட்டேன்.

இவ்ளோ பிரேக்குக்கு அப்பறம் என்ன என்மேல திடீர்ன்னு அக்கறைன்னு இப்ப வந்திருக்கன்னு என்கிட்ட நீ கேட்கலாம் எழுத்து மனதின் வடிகால்தானே இப்ப எனக்கு அது தேவை அதுதான் உன்னிடம் வந்துவிட்டேன். என்னுடைய பெஸ்ட் ஃப்ரண்ட் நீதானேடா உன்னை விட்டால் யாரிடம் செல்வேன் நான்? மேரேஜ்க்கு அப்புறம் என்னுடைய கதையை உன்னிடம் சொல்லவே இல்லியே நான்..!

திருமணத்திற்க்கு பிறகு ஏற்காட்டில் வேலை பார்த்தேன் அது ஒரு நொன்ன நாட்டியம் பிடித்த வேலை. சம்பளம் 30ஆயிரம் பரவாயில்லைதான். ஆனால் மனசுக்கு நிம்மதியில்லாத வேலை படித்தது எலக்ட்ரிகல் பார்க்கசொன்ன வேலை எலக்ட்ரிக்கலோட சேர்ந்து ப்ளம்பிங்,சிவில்,லொட்டு,லொசுக்கு எல்லாமே சரி மாதாமாதம் சம்பளம் கரெக்டா வருதே கொஞ்சம் மற்ற வேலைகளும் கத்துக்கிடலாமேன்னு மனசை தேத்திக்கிட்டு வேலை பார்த்தேன்.ஆனா ரொம்ப நாளைக்கு என்னால அங்க நிலைக்க முடியாததற்க்கு வேலை மட்டுமல்ல இன்னொரு காரணமும் உண்டு.

ஏற்காட்டில் எனக்கு மேனேஜராக கார்த்திகேயன் என்பவர் முதல் இரண்டு மாதங்களாக இருந்தார். அவர் வேறு கம்பெனிக்கு சென்றுவிட அவருக்கு பதில் கொடைக்கானலிலிருந்த நிறுவனத்தின் இன்னொரு ரெசார்ட்டிலிருந்து மாற்றலாகி ஷங்கர் என்பவர் மேனேஜராக வந்தார் , நல்ல ஜாலியான ஆள் என் வய்துடையவர்தான் இன்னும் மணமாகியிருக்கவில்லை.முன்பிருந்தவர் போல சிடு சிடுவென்றில்லாமல் கலகலப்பாக இருந்தார். எங்களுக்கான தங்கும் அறை நிறுவனத்திலேயே ஒதுக்கப்பட்டிருந்தது இரண்டுபேருக்குமே ஒரே அறைதான். ஆதாலால் பேசுவதற்கு நிறைய விஷயங்கள் இருந்தன. அவருடைய பெற்றோருக்கு அவரும் அவருடைய அக்காவுமாக இரு பிள்ளைகள்.கொஞ்சம் டல்லாக சென்றுகொண்டிருந்த வேலை இவர் வந்தபின்பு சற்று சுறுசுறுப்பாக சென்றுகொண்டிருந்தது அவர் திருச்சி, நான் தேனி. வார விடுமுறைகளை ஷேர் செய்து இருவரும் விடுமுறைகளுக்கு ஊருக்கு சென்றுவந்தோம்.

ஏற்காட்டிலிருந்து எனக்கு தேனிக்கு பேருந்தில் செல்ல குறைந்தது ஏழுமணி நேரம் பிடிக்கும் பெரும்பாலும் நான் இரவில் புறப்பட்டு அதிகாலை செல்லுவது வழக்கம். ஷங்கர் ஏற்காட்டிலிருந்துசேலம் வழியாக நாமக்கல் வந்து அங்கிருந்து முசிறி வழியாக திருச்சிக்கு அவரது யுனிகார்ன் இருசக்கரவாகனத்திலே செல்வதும் வருவதும் வழக்கம். அப்படி ஒரு வார விடுமுறைக்கு நான் தாய்மாமன் மகளின் மஞ்சள் நீராட்டு விழாவுக்கு உடுமலைப்பேட்டை செல்லவேண்டியிருந்தது ஷங்கருக்கும் ஒரு முக்கிய வேலை இருந்தது மறுநாள் ஞாயிற்றுக்கிழமையென்பதால் வேலையாட்கள் ஒருவரும் வரமாட்டார்கள் எனவே இருவருமே விடுப்பெடுத்தோம் நான் அனுமதி பெறாத விடுப்பு அவர் அனுமதி பெற்ற விடுப்பு..எனக்கு ஞாயிறு மாலையில்தான் ஃபங்க்சன் என்பதால் அவர் சனிக்கிழமை இரவே புறப்பட்டுவிட நான் மறு நாள் காலையில் சேலம்வழியாக திருப்பூர் சென்று உடுமலைப்பேட்டை செல்ல மாலையாகிவிட்டிருந்ததது.ஃபங்க்சனுக்கு தேனியிலிருந்து அம்மா அப்பா என்மனைவி மனைவியின் அம்மா அப்பா அத்தனை பேரும் சேர்ந்தே வந்திருந்தனர்.ஒரு வழியாக ஃபங்க்சன் முடிந்து உடுமலை பேருந்துநிலையத்திற்க்கு வந்தால் அந்நேரத்தில் திருப்பூருக்கு உடுமலையிலிருந்து பேருந்து இல்லை.என்ன செய்வது நாளையும் விடுப்பெடுத்துவிடலாமா என்று யோசிக்கையில் எடுத்திருப்பதோ அனுமதி பெறாத விடுப்பு ஷங்கர் வேறு முக்கிய வேலை என்று சென்றிருப்பதால் நாளையும் வருகிறாரோ இல்லையோ எனவே பழநி வழியாக திண்டுக்கல் சென்று திண்டுக்கல்லிருந்து சேலம் வழியாக ஏற்காடு செல்லலாம் என்று முடிவெடுத்தேன் அதன் படியே மறு நாள் திங்கள்கிழமை அதிகாலை ஆறுமணியளவில் ஏற்காட்டிற்க்கு சென்றேன்.

அன்று மற்ற வேலைகளெல்லாம் முடிந்து சைட் ஆபிஸ்க்கு வந்து தலைமை அலுவலகத்துக்கு அனுப்பவேண்டிய தகவல்களெல்லாம் மெயில் அனுப்பிவிட்டு மற்ற வேலைகளை கவனிக்க தொடங்கினேன். சுமார் பத்து மணிவரையிலும் ஷங்கர் வரவில்லை அவரது கைபேசிக்கு அழைத்தால் நாட் ரீச்சபிள் என்ற பதில். தலைமை அலுவலகத்திலிருந்து ஏரியா மேனேஜர், ஷங்கர் இன்னும் வரவில்லையா என்று போன் போன் மேல் போட்டுக்கொண்டிருந்தார் ஒருவேளை அவருக்கும் தொடர்பு கிடைத்திருக்காது அல்லது ட்ரைவிங்கில் இருப்பதால் போன் எடுத்திருக்கமாட்டார் . பகல் ஒருமணியாகிவிட்டது ஷங்கர் இன்னும் வரவில்லை.இன்னொருமுறை அழைத்துப்பார்க்கலாம் என்று அழைத்தேன் ரிங் போனது ஆனால் எடுத்தவர் வேறொருவர். நான் அவரிடம் ஷங்கர் எங்கே என கேட்க இல்லைங்க நான் இங்க முசிறியிலிருந்து பேசறேன் இந்த போன் வச்சிட்டு இருந்தவருக்கு தொட்டியத்துக்கிட்ட ஆக்ஸிடெண்ட்ங்க அவரை முசிறியில சேர்த்திருக்கோம் பலமான அடி சீரியஸாக இருக்கார்ன்னு சொன்னார். இந்த விஷயத்தை என்னால் நம்பமுடியவில்லை அடுத்தென்ன செய்வதென்றும் தெரியவில்லை ரெசார்ட்டிலிருந்த மெயிண்டெனென்ஸ் மேனேஜர் ஆண்டனிதாஸ் நல்லமனிதர் நன்கு பழகக்கூடியவரென்பதால் அவரிடம் முதலில் சென்று விஷயத்தை கூறினேன் அவரும் அப்படியெல்லாம் இருக்காது அவர் சும்மா யாரையாவதுவிட்டு விளையாடுகிறார் என்று அவரும் அவர் எண்ணிற்க்கு அழைத்தார் மறுமுனையிலிருந்து அதே குரல் அதே பதிலளித்திருக்கிறார்.

சரி முசிறி அரசு மருத்துவமனையென்றுதானே சொல்லியிருக்கிறார்கள் விசாரிப்போமென்றால் அந்த மருத்துவமணையை சேர்ந்த யாரையுமே தொடர்புகொள்ளமுடியவில்லை மணி இரண்டாகிவிட்டது.ஷங்கர் இன்னும் வரவில்லை சரி இன்னொருமுறை அவரது எண்ணிற்கு அழைத்துப்பார்ப்போம் என்றழைத்தால் அங்கு சில அழுகுரல்கள் அதுவும்பெண்களுடைய அழுகுரல்கள் எங்களைவிட்டு போயிட்டியேடா என்ற குரல்கள்தான் கேட்டன, போனை எடுத்தது ஷங்கரின் தாயார். உணரமுடிந்தது ஷங்கர் இனிஎப்பொழுதுமே வரப்போவதில்லையென. தலைமை அலுவலகத்துக்கு தகவல் சொல்லிவிட்டு உடனே ரெசார்ட் மேனேஜர் இன்னொருவர் நான் மூவரும் கிளம்பி தொட்டியம் போலீஸ்ஸ்டேசன் சென்று அங்கு ஆக்ஸிடெண்ட் நிலவரங்களை தெரிந்துகொண்டோம்.ஆக்ஸிடெண்ட் ஆன அன்று காவிரியில் மண் அள்ளி களைத்துப்போய் அந்த குறுகியசாலையின் ஒருபகுதி முழுவதையும் அடைத்தபடி தொடர்ந்து ஆறுவண்டிகள் நின்றுகொண்டிருந்திருக்கின்றன. அவற்றை தன்னுடைய இரு சக்கரவாகனத்தில் கடக்கும்பொழுது எதிரே வந்த ஆம்னிவேனில் மோதி ஆக்ஸிடெண்ட். அந்தவழியாக சென்றுகொண்டிருந்த ஒருவரின் உதவியோடு அவரை அந்த ஆம்னிவேனின் டிரைவரே எடுத்து சென்றிருக்கிறார்கள் தொட்டியம் அரசுமருத்துவமனையில் பேண்டேஜ்மட்டும் இட்டு முசிறி சென்றுவிடுங்கள் என்றிருக்கிறார்கள்.

முசிறி சென்று பதினைந்து நிமிடங்களிலே இறந்துவிட்டிருக்கிறார். ஷங்கர் எப்பொழுதுமே ஹெல்மெட் அணிந்துதான் வண்டியோட்டுவார். அன்றைக்கும் ஹெல்மெட்டில்தான் வந்திருக்கிறார் இன்றிருந்துவிட்டு நாளைக்குபோ என்ற தாயின் சொல்லை தட்டி வந்திருக்கிறார். டாக்டரிடம் சென்று இறந்த விபரங்கள் கேட்க அவருக்கு கால் தனியாக வந்துவிட்டிருந்திருக்கிறது வேறெங்குமே அடியில்லை முதுகுத்தோல் முழுவதும் உரிந்து சிராய்ந்திருப்பது தவிர வேறெங்கும் அடியில்லை ஆக்ஸிடெண்ட் அதிர்ச்சியில் இறந்துவிட்டதாக அவரது விபரம் கூறியது. மேற்கொண்டு மார்ச்சுவரி சென்று அங்கு அவரது உடலைப்பார்த்ததும் நேற்றைய முந்தைய இரவு என்னுடன் உறங்கிக்கொண்டிருந்த அந்த ஷங்கர் அன்று தனியாக உறங்கிகொண்டிருந்தார் அவ்வளவுதான் முடிந்துவிட்டது ஒருவரின் கனவு வாழ்க்கை அத்தனையும். மேற்கொண்டு போஸ்ட்மார்ட்டம் இறுதிச்சடங்கென அவரது காரியங்கள் முடிந்து ஏற்காடு வர மறுநாள் இரவாகிவிட்டிருந்தது. அலுவலகத்திலிருந்த,ரெசார்ட்டில் பணிபுரிந்த அனைவரும் இறுதிசடங்கிற்க்கு வந்திருந்த காரணத்தால் ஷங்கரின் நினைவுகளை மறக்க அவர்களுடன் மற்ற விஷயங்கள் பேசியபடியே ஏற்காடு வந்தோம்.

வந்து அறைக்குள் நுழைந்ததுமே எனக்கு ஷாக்.காரணம் ஷங்கர் அப்படி அப்படியே விட்டு சென்றிருந்த அவரின் உடைகள் உடைமைகள் சிலகணம் மீண்டும் எனக்கு கண்ணீர் வரத்துவங்கியிருந்தது. சில நிமிடங்களுக்கு பிறகு ரிசப்சனுக்கு தொடர்புகொண்டு இரண்டு ரூம்பாய்களை வரவழைத்து அவரின் உடைமைகளை பேக்கப் பண்ணிவிட்டு என்னுடைய அறையை மாற்றிக்கொண்டு சென்றேன். அறையைத்தான் மாற்றமுடிந்ததே தவிர அவரது நினைவுகளை மறக்கமுடியவில்லை.சில தினங்கள் தூக்கம் வரமறுத்தது இத்தோடு வேலைகள் கூடுதலாக சேர்ந்து ஆட்டுவித்தன. வீட்டில் மனைவிவேறு எட்டாம் மாதம் கர்ப்பிணியாக இருக்கிறாள் ஒருநாள் இரவு முழுவதும் யோசித்தேன் மறு நாள் காலை தலைமை அலுவலகத்திற்க்கு ரிசைன்லெட்டர் அனுப்பியாயிற்று ஒருமாதம் கழித்துதான் ரிசைன் செய்யமுடியும் புதிதாக ஒருவர் வரும்வரையில் இருக்கவேண்டும் என்ற நிபந்தனைகளோடு என்னுடைய ரிசைன் ஏற்கப்பட்டது. ஒருபுறம் வீட்டிற்க்கு சென்று மனைவியோடு மனைவியின் பிரசவகாலத்தில் உடனிருக்கப்போவதற்காகவும் மகனோ மகளோ பிறக்கப்போகிறார்கள் என்பதற்கும் மகிழ்ச்சி. மறுபுறம் அடுத்த வேலையைப்பற்றி யோசிக்காமல் முடிவெடுத்துவிட்டோமே என்ற கவலை.

எண்ணித்துணிகவென்று வள்ளுவரே சொல்லிவிட்டார் இனி என்ன அடுத்து மூன்றுமாதங்களும் ஓய்வெடுப்பது அதற்குப்பிறகுதான் வேலைதேடுவதென்றும் முடிவெடுத்துவிட்டேன் அதுவரை ஆறுமாதங்கள் தவறாமல் கிட்டிய சம்பளப்பணமிருக்கிறதே என்ன கவலை?.நவம்பர் மாதம் 18ம்தேதியோடு வேலையிலிருந்து நின்று ஊருக்கு வந்து சேர்ந்தேன். அன்றிலிருந்து தினம் தினம் என்னுடைய ஊரிலிருந்து தேனி பைபாஸ் வழியாக என்னுடைய யுனிகார்னிலேயே சென்று ஆண்டிபட்டியில் தன் தந்தைவீட்டில் தலைபிரசவத்திற்கு சென்றிருக்கும் என் மனைவியை கண்டுபேசி மீண்டும் என்னுடைய ஊருக்கு திரும்புவது என மனைவியின் பிரசவகாலம் வரை காலம் வேகமாக கடந்தது.

டிசம்பர்மாதம் பத்தாம்தேதி அதிகாலை மூன்றுமணிக்கு தொலை பேசி ஒலிக்கிறது அம்மாதான் எடுத்திருப்பார்கள் போலும் என் மனைவிக்கு பனிக்குடம் உடைந்துவிட்டதாகவும் மருத்துவமனையில் சேர்த்திருப்பதாகவும் தகவல் வந்திருக்கிறது அம்மா என்னை எழுப்பி விஷயம் சொன்னார்கள் இந்நேரம் செல்வது சரியாக இல்லை காலை ஆறுமணிக்கு மருத்துவமனைக்கு செல்லலாம் என்று சொல்லிவிட்டு சென்றார்கள் எனக்கு அத்ற்கு பிறகு உறக்கம் பிடிக்கவில்லை. ஐந்துமணிக்கு மேல் குளித்து உடைமாற்றி நான் வண்டியில் வருவதாகவும் அம்மாவையும் அப்பாவையும் பேருந்தில் செல்லும்படியும் கேட்டுக்கொண்டேன்.

காலை உணவென்று எதையோ கொறித்தேன் பிரசவஅறைக்கு சென்று ஆரம்பவலியில் துடித்துக்கொண்டிருந்தவளை எதையாவது சொல்லி சிரிக்கவைக்கமுயன்று தோற்று ஆறுதலாக அவள் கைபற்றியபடியேதான் இருந்தேன். ஒரு சில மணி நேரங்களுக்கு பிறகு நல்லவலி போலும் துடித்துவிட்டாள் என்னைகொன்றுவிடுங்கள் வலி தாங்க முடியவில்லை என்ற குரல் என்னுடைய அத்தனைகால திடகாத்திரத்தை உடைத்து என்கண்ணில் பெருக்கெடுத்ததுநீர். அம்மா என்னை வெளியே சென்றுவிட சொல்லிவிட்டார்கள் நான் வெளியேதான் நிற்கும்படியாயிற்று உள்ளிருந்து ஒரே அழுகைதான் வெளியேயும் அதேதான் அதற்கு மேல் என்னால் அங்கு நிற்கமுடியவில்லை மணி பகல் 2 ஆகிவிட்டது டாக்டர் நர்ஸ் என முயன்று தோற்றுகொண்டிருக்கிறார்கள்.

சட்டென முருகக்கடவுளை நினைத்தேன் வண்டியை எடுத்தேன் ஆண்டிபட்டியிலிருந்து 15கிலோமீட்டர் தள்ளி மலைக்குன்றிலிருக்கும் வேலப்பரை தரிசித்து அவனுக்கு காணிக்கையிட்டு வேண்டுதலிட்டு திரும்பி வந்து திருநீரை கொண்டுவந்து அம்மாவிடம் கொடுத்து அவளுக்குபூசிவிடச்சொன்னேன். அதுவரை குழந்தை பிறக்கவில்லை நான் கோவிலுக்கு சென்ற நேரம் அவளிடம் நீர் குறைந்துவிட்டது அது குழந்தைக்கு ஆபத்தாக முடியலாம் எதற்கும் ஆபரேஷன் செய்துவிடலாம் என்று டாக்டர் சொல்லியிருக்கிறார்கள். நான் வந்து ஒரு பதினைந்து நிமிடங்களில் உள்ளிருந்து அம்மாவின் குரல் என்னைப்பெத்த ராசாவென்று என் முகம் மலர்ந்தது அருமை புதல்வன் பிறந்துவிட்டான் அதுவும் என் பிறந்தநாள் பரிசாக மனைவியிடமிருந்து மறுநாள் என்னுடைய பிறந்தநாளுக்கு அவனிடம் ஆசிர்வாதம் வாங்கி ஒரே சந்தோஷம் குதுகலம்தான்…!

இன்னும் பேசுவோம் வில்சன்...!

Post Comment

10 comments:

Trackback by ராஜி July 24, 2013 at 5:51 PM said...

அப்பாவாகியாச்சா?! வாழ்த்துகள். மருமக பிள்ளைக்கு ஆசிகள். நாத்தனாரை விசாரித்தாதக சொல்லவும். இனி குட்டி வசந்தின் சேட்டைகள் பற்றிய பதிவு வரும்ன்னு நினைக்கிறேன். வில்சனோடு நாங்களும் தெரிஞ்சுக்க ஆவலாய் உள்ளேன்.

Trackback by ராஜி July 24, 2013 at 5:52 PM said...

பிறந்த நாள் வாழ்த்துகள் வசந்த்.

Trackback by சாந்தி மாரியப்பன் July 24, 2013 at 10:03 PM said...
This comment has been removed by the author.
Trackback by சாந்தி மாரியப்பன் July 24, 2013 at 10:04 PM said...

பிறந்த நாள் நல்வாழ்த்துகள் வசந்த். மருமான் நலமா?.. என்ன பெயர்?

Trackback by sathishsangkavi.blogspot.com July 25, 2013 at 2:44 AM said...

வாழ்த்துக்கள் வசந்த்...

Trackback by ஸ்ரீராம். July 25, 2013 at 12:46 PM said...

வாழ்த்துகள் வசந்த்.

Trackback by 'பரிவை' சே.குமார் July 26, 2013 at 1:17 AM said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் வசந்த்.

Trackback by ரேவா July 26, 2013 at 6:45 AM said...

நீண்ட நாள் கழித்து இரட்டை விருந்தோடு வந்திருந்தாலும், தன் வாழ்வை, தன் கனவை தனித்து இந்த பூமியில் விட்டுச்சென்ற அந்த சகோ்தரனின் ஆத்மா அமைதி கொள்ளட்டும்.

மற்றபடி செல்லத்திற்கு அன்புகள்.. பிங்க் குட்டி இன்னும் என் கணினித்தி்ரையில் சிரித்துக் கொண்டே இருக்கிறான்...

Trackback by வெங்கட் நாகராஜ் July 26, 2013 at 5:43 PM said...

வாழ்த்துகள்....

உங்கள் நண்பரின் மரணம் சற்றே சோகத்தினைத் தந்தாலும் இரண்டு சந்தோஷ சமாச்சாரங்கள் சொல்லியது மனதினை மகிழ்ச்சியுறச் செய்தது.....

Trackback by நிலாமகள் August 28, 2013 at 5:02 AM said...

காலத்தின் புரட்டலில் துக்கமும் மகிழ்வும் இறப்பும் பிறப்பும் கீழ் மேலாக சுழல்வதில் தான் நம் இருப்பும் விருப்பும் நிர்ணயிக்கப் படுகிறதோ...

ஒரே நேரத்தில் அனுதாபத்தையும் மகிழ்வுடனான வாழ்த்துக்களையும் தெரிவிக்கும்படியான பதிவு சகோ...

உங்களை விஞ்சி நிற்கப்போகும் குட்டி வசந்துக்கு மகிழ்வான ஆசிகள்.

தங்கள் துணைவிக்கு ஒரே நாளில் இரட்டை சந்தோசம்! வாழ்க வளமுடன்!!