தந்தை சொல் மிக்கதொரு மந்திரமில்லை..

| December 31, 2011 | |
இப்பொழுது எல்லாம் பணத்திற்க்கு பதில் நிறைய கிரெடிட் கார்ட்கள் பயன்படுத்துகிறோம் இல்லையா? கிரெடிட் கார்ட் இல்லாத காலத்திலும் அல்லது கிரெடிட் கார்ட் இல்லாத குடும்பத்திற்க்கும் இருந்த, இருக்கின்ற ஒரே கிரெடிட் அப்பாதான் . எனக்கு பணத்திற்க்கு மட்டுமல்ல புத்திமதிகளுக்கும் அறிவுரைகளுக்கும் கூட என் அப்பாதான் கிரெடிட் கார்ட்.என்னோட அப்பா பாக்கெட்ல எப்பவும் நிறைய பணம் வைத்திருப்பார். அவருடன் வெளியில் செல்லும் பொழுதுகளில் கடை வீதிகளில் இருக்கும் கடைகளில் முதல் கடையில் வாங்கிய பொருள் ஐம்பது ரூபாய்க்கும் குறைவாகவே இருந்தாலும் ஐநூறு ரூபாய் தாளை எடுத்து நீட்டுவார் அவர்கள் கொடுக்கும் மீதி சில்லரையை வாங்கி வைத்துக்கொண்டு அடுத்தடுத்த கடைகளிலும் அதேபோல நூறு ரூபாய் தாளையோ ஐநூறு ரூபாய் தாளையோ கொடுத்து சில்லரை வாங்கிக்கொள்வார் , ஏம்ப்பா அதான் சில்லரை வைத்திருக்கிறீர்களே பின் ஏன் மீண்டும் மீண்டும் சில்லரையாக சேர்க்கிறீர்கள் என்றால் அவசர ஆத்திரத்திற்க்கு பயன்படுத்துவதற்க்கு சில சமயம் சில்லரை இல்லாமல் போய்விடும் அதற்க்காக நான்கைந்து கடைகள் ஏறி இறங்குவதைவிட நம்கையில் சில்லரையிருந்தால் அலைய வேண்டியிருக்காதென்பார். அப்பொழுதிருந்து அதேதான் நானும் பின்பற்றுகிறேன் என் பாக்கெட்டில் பணம் இருக்கிறதோ இல்லையோ நிறைய சில்லரைகள் இருக்கும். அதன் பயன்பாடு அவசர ஆத்திரத்திற்க்கு மட்டுமல்ல மாதக்கடைசியிலும் உதவியிருக்கிறது.

என்னுடைய அப்பா எல்லாவிதத்திலும் திறமையானவராயிருந்தாலும் எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் முடிவெடுப்பதில் அவருக்கு சிறு மன உளைச்சல் உண்டு . என் கைபிடித்து சாலையை கடக்க முயற்சிக்கும் பொழுது  அவர் படும் பாடு சொல்லி மாளாது அதுபோன்ற தருணங்களிலும் சில வேறு விஷயங்களிலும் அப்பாவிடம் எதிர்த்து அல்லது கடிந்து கொண்டிருக்கிறேன். சில சமயம் அமைதியாகிவிடுவார் சில சமயம் கோவித்துக்கொள்வார் கோவித்துக்கொண்டு சிலநாட்கள் அப்பாவும் நானும் பேசாமலும் இருப்போம் அச்சமயங்களில் நான் என்னுடைய அறையில் எதாவது புத்தகம் படித்துக்கொண்டிருப்பேன் வெளியிலிருந்து பாட்டுச்சத்தம் கேட்கும் அப்பாதான் பாடிக்கொண்டிருப்பார் ''ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ? இல்லையொரு பிள்ளையென்று ஏங்குவோர் பலரிருக்க இங்கு வந்து ஏன் பிறந்தாயோ'' வென்று அம்மாவும் அப்பாவும் சிரித்துக்கொண்டிருப்பார்கள் நான் உடனே வெளியில் சென்று ஏன் பெத்தீங்க என்பேன். இதற்காகத்தானடா என்று வாங்கிவந்த எனக்குபிடித்த பால்கோவாவை எடுத்து நீட்டி கன்னங்களில் தடவிக்கொடுப்பார் . பால்கோவாவிற்கு இல்லையானாலும் அப்பாவின் அந்த அன்பிற்க்கு சரண்டராகிவிடுவேன்.

அப்பா பாடல்கள் நன்றாக படிப்பார் பழைய பாடல்கள் விரும்பி கேட்பார் சந்தோஷமான நேரங்கள் துன்பமான நேரங்கள் அதனதன் நேரங்களுக்கேற்ப அப்பா படிக்கும் பாடல்கள் இருக்கும் சந்தோஷமான பாடல்கள் படிக்கிறாரென்றால் அப்பா சந்தோஷமாக இருக்கிறார் என்று கொள்ளலாம். வருத்தமான பாடல்கள் படிக்கிறாரென்றால் அப்பா கோபத்திலிருக்கிறாரென்றும் கொள்ளலாம். பெரும்பாலும் அப்பா சந்தோஷமான பாடல்கள் படிக்கும்பொழுதே எனக்கு ஆக வேண்டிய காரியங்களை சாதித்துக்கொண்டிருக்கிறேன். அப்பாவின் உடன் பிறந்தோர் அப்பாவுடன் சேர்த்து மொத்தம் ஒன்பது பேர் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதம் . என்னுடைய பாட்டனார் என் அப்பாவின் தந்தை கடைசி வரையிலும் எங்களுடன்தான் இருந்தார். பாட்டையா தன்னுடைய பிற மகன்களைபற்றி வருத்தப்படும்பொழுது ''ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா ஒரே ஒரு ராஜாவுக்கு ஒரே ஒரு ராணி ஒரே ஒரு ராணி பெற்றால் ஒன்பதுபிள்ளை அந்த ஒன்பதிலே ஒன்றுகூட உருப்படியில்லை'' என்ற பாடலை அப்பா பாட்டையாவிடமும் பாடிக்காட்டுவார் கூடவே அம்மாவும் பாடுவதுண்டு, வாஸ்தவம்தான்ப்பா என்று பேச்சை முடித்துக்கொள்வார் பாட்டையா.இப்பவும் அந்த பாடல் பார்க்கும்பொழுதெல்லாம் அப்பா ஞாபகம் வந்து கண்கலங்கிவிடுகிறது இந்த பதிவு கூட அந்த பாடல் கேட்டுக்கொண்டேதான் எழுதிக்கொண்டிருக்கிறேன்..அப்பா திருமணத்திற்க்கு முன்பு சென்னையில் பல வருடங்கள் வேலை செய்திருக்கிறார். நடிகர் ராஜசேகர் எங்கள் ஊர்க்காரர் ஒருவரின் உறவினர் என்பதால் ராஜசேகரின் கெஸ்ட் ஹவுஸ் ரூமில் தங்கி வேலை செய்திருக்கிறார் ராஜ சேகர் தம்பி செல்வாவை சிறுவயதில் அப்பா தூக்கி விளையாடியிருப்பதாக கூறுவார். அப்படி அங்கு வேலை செய்து கொண்டிருந்த சமயம் அப்பாவுடன் அப்பாவின் நண்பர் ஒருவரும் ஒரே அறையில் தங்கியிருந்து பணிபுரிந்திருக்கின்றனர். அந்த நண்பர் ஒரு நாள் சமயம் பார்த்து அப்பாவிடமிருந்த நகைகள் உடைகள் பணம் அத்தனையையும் திருடிக்கொண்டு தலை மறைவாகிவிட்டாராம். அந்த படிப்பினையை என்னிடம் நண்பர்களிடம் பழகுவது தப்பல்ல ,நண்பர்களின் குணம் அறிந்து பழகு , நம்மிடம் நல்லவிதமாக பழகிவிட்டு நமக்கு பின்புறம் போய் நம்மை பற்றி குறை பேசுபவர்களும் உண்டு அதனால் ''ஊரெல்லாம் எனக்கு நண்பர்களிருக்கிறார்கள் என்ற பெருமையை விட நாம் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கிற நாலு நண்பர்கள் இருந்தால் போதும்'' என்பார் . அவர் சொன்னதன் படி இதுவரை என்னுடைய நண்பர்கள் எண்ணிக்கை ஏழைத் தொட்டிருக்கிறது. அவர்கள் ஒவ்வொருவரின் எண்ணிக்கையிலும் ஒன்று கூடியிருக்கிறது.

அப்பா எனக்கு நிறைய பொருட்கள் வாங்கிக்கொடுத்திருக்கிறார் ஆனால் எல்லாவற்றையும் கேட்டதும் வாங்கிக்கொடுத்ததுகிடையாது சில நாட்கள் கழித்தே வாங்கிக்கொடுத்திருக்கிறார். பணம் இருக்கே கேட்டதும் வாங்கிக்கொடுத்திருக்கலாம்தானே அப்பா என்றால் , கேட்டதும் வாங்கிக்கொடுத்தால் வாங்கிய பொருளின் மதிப்பறிந்திருக்க மாட்டாய். இப்பொழுது இத்தனை நாட்கள் கேட்டு கேட்டு வாங்கிய பொருளென்று அதை பத்திரமாக வைத்திருப்பாயல்லவா என்பார். கடந்த 1999 ம் வருடம் இதே டிசம்பர் மாதம் வந்த என்னுடைய பிறந்த நாளுக்கு நான் கேட்காமலேயே டைட்டன் ஸ்கொயர் டைப் வாட்ச் ஒன்று வாங்கிக்கொடுத்தார். வாட்ச் என்று அப்பா வாங்கிக்கொடுத்தது அதுதான் முதன் முறை அதுவரை நான் வாங்கிய உறவினர்கள் வாங்கிக்கொடுத்த நிறைய வாட்ச்கள் தொலைந்து போயிருக்கின்றன அல்லது உடைந்து போயிருக்கின்றன ஆனால் இந்த வாட்ச் கிட்டத்தட்ட பனிரெண்டு வருடங்களாக என்னுடனே இருக்கிறது என்பதை விட அப்பாவின் சார்பில் என்னுடன் இருந்து அன்பையும் அறிவுரையையும் தேவைப்படும் சமயங்களில் தந்துகொண்டேயிருக்கிறது...நிறைய புதுரக வாட்ச்கள் பார்க்கும்பொழுது    வாங்க வேண்டுமென்று ஆசையும் வந்ததில்லை..வேறு ஏதாவது வாட்ச்கள் கட்டும் சூழ்நிலை வந்தாலோ இல்லை இந்த வாட்ச் கட்ட மறந்த நாட்களோ மகிழ்ச்சியுடன் நகர்ந்ததில்லை..இதோ இன்றைக்கு அப்பாவுக்கு எழுதும் பிறந்த நாள் வாழ்த்தையும் நான் எழுத எழுத பார்த்து சந்தோஷப்பட்டுக்கொண்டிருக்கிறது.

பிறந்த நாள் வாழ்த்துகள் அப்பா..

சென்ற வருடம் அப்பாவுக்கு எழுதிய பிறந்த நாள் வாழ்த்து பதிவு அன்பினாலே உண்டாகும் இன்ப நிலை

பதிவை வாசித்த அனைவருக்கும் நன்றிகள்..


Post Comment

5 comments:

Trackback by Unknown December 31, 2011 at 5:20 AM said...

நீண்ட காலம்
நோய் நொடி இன்றி
எப்போதும் சந்தோசமாய் இருக்க
அப்பாவுக்கு அன்பான பிறந்த நாள் வாழ்த்துக்கள்

உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் மாம்ஸ்

Trackback by ஸ்ரீராம். December 31, 2011 at 8:54 AM said...

இந்த சில்லறை மாற்றும் விஷயம் நானும் கடைப் பிடிக்கும் வழக்கம்!

அப்பாவுக்கு எங்கள் பிறந்தநாள் வாழ்த்துகள்.

நீங்கள் கட்டியுள்ள அதே டைட்டன் ஸ்கொயர் ப்ளாக் டயல்தான் நானும் வைத்திருந்தேன்! எண்பதில் என் நண்பர் எனக்குப் பரிசளித்தது. வேறு வாட்ச் கட்ட எனக்கும் மனம் வந்ததில்லை. இரண்டு வருடங்களுக்குமுன் சில்லறை ரிப்பேர்களுக்குப் பின் உபயோகமில்லாமல் போய் விட்டாலும் அதன் நட்பு மதிப்புக்காக பத்திரமாக வைத்திருக்கிறேன். வேறு வாட்ச் கட்ட மனம் வரவில்லை. ஆறு மாதத்துக்கு முன் புது வாட்ச் வாங்கினேன்!

புத்தாண்டு வாழ்த்துகள்.

Trackback by ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) December 31, 2011 at 9:23 AM said...

அப்பாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Trackback by ரேவா December 31, 2011 at 11:16 AM said...

வசந்த் பதிவ படிக்கையில் என் அப்பாவும் கண்முன்னாடி வந்து போறத தவிர்க்க முடியல, வருட கடைசியில் வசந்த் சென்டிமென்ட் போஸ்ட் போட்டுருக்காறேனு பாத்தேன் ஆனா அப்பாவுக்கு பிறந்தநாள் பதிவு சூப்பர் வசந்த்... சொல்றதுக்கு வார்த்தை இல்லை, அப்பாவோட ஆசிய நானும் வாங்கிக்கிறேன்...அப்பறம் நாகரீக சுழற்ச்சியில எல்லாமே இங்க மாறிப்போக, அப்பா கொடுத்த பொருளுக்கு அவர் வடிவம் கொடுத்து உன்னோடு வச்சுருக்கிற உன் பாங்கு செம....வேற என்ன சொல்ல எல்லாரும் நல்லாருப்போம்...புதுவருடம் புது உறவோடு மகிழ்ச்சியாய் தொடங்கட்டும்...மனம் நிறைந்த வாழ்த்துக்கள் உனக்கும்.... பிறந்த நாள் வாழ்த்துக்கள் அப்பா....அப்பறம் ட்ரீட் கேட்டேன் னு சொல்லு அப்பாட்ட...

Trackback by ஹேமா December 31, 2011 at 3:02 PM said...

அப்பாவுக்கு என் அன்புப் பிறந்த நாள் வாழ்த்துகள் !

வசந்து....உங்களுக்க்கும் உங்கள் அன்புக்கும் என் மனம் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துகள் !

இப்பவே அப்பாவுக்குப் போன் பண்றேன்.அப்பா ஞாபகம் வந்திடிச்சு எனக்கும் !