ப்ரிய நண்பன்...!

| June 6, 2011 | 27 comments |
அவ்வப்பொழுது ஆத்ம திருப்திக்காக எழுதும் பதிவுகளில் இதுவும் ...

உன் நண்பன் யாரென்று சொல் உன்னைப்பற்றி சொல்கிறேன் என்று ஒரு பழமொழி இருக்கிறது. இப்படி யாராவது என்னிடம் வந்து கேட்டால் சட்டென்று இவன்தான் என் நண்பன் என்று சொல்வதிற்கு தகுதியானவன் இவன்.சேட்டைக்காரனா இருக்கான்ல ம்ம் என் ஃப்ரண்ட்ல அப்டித்தான் இருப்பான் , நவநீதகிருஷ்ணன் எனக்கும் இவனுக்கும் மதுரையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும்பொழுது சக அறைவாசியாகத்தான் அறிமுகம். நான் அந்த நிறுவனத்தில் சேர்வதற்கு  இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்பிருந்து அந்த நிறுவனத்தில் இவன் பணிபுரிந்தான். வேலையிடத்தில் இவன் இருக்குமிடத்தில் கலகலப்பிற்கு பஞ்சமிருக்காது. எனக்கும்கூட இவனிடமிருந்துதான் இந்த நக்கல் நையாண்டி வந்திருக்கவேண்டும் அவ்வளவு நக்கல்பிடித்தவன் எதிரே பேசுபவர்களை தன்னுடைய நகைச்சுவையான பேச்சாலேயே கவர்வான், என்னையும் அப்படியே. வெளியே இவ்வளவு கலகலப்பாக பேசித்திரிபவனின் சொந்த வாழ்க்கையில் இருக்கும் சில மறக்க முடியாத வருத்தமான நிகழ்வுகள் என் போன்ற சில நெருங்கிய நண்பர்களுக்கு மட்டுமே தெரியும். 

ஆரம்பத்தில் சக தொழிலாளியாக இருந்த நாங்கள் நாட்கள் செல்ல ஒருவருக்கொருவர் எங்களுக்கிடையேயான , புத்தக வாசிப்பு , ரசனைகள் , பழக்கவழக்கங்கள் ஒருவருக்கொருவர் பகிர்ந்து இணைபிரியாத நண்பர்களானோம். சில நேரங்களில் ஏதாவது அவசரகதியான பணிகளை முடிக்க கடினமான பணிகளை முடிக்க அரிசிமூட்டை (மேலாளருக்கு அரிசிமூட்டையென்ற பட்டப்பெயரும் வைத்தது இவன்தான்) தேடுவது எங்கள் இருவரையாகத்தான் இருக்கும் இருவருக்குமே தொழிலில் அதிகப்படியான ஆர்வம் ஆதலால் இருவருமே மிக விரைவாகவே பணி கற்றுக்கொண்டோம். இருவரும் தனித்தனியாக பணிபுரியும் பொழுது போட்டி போட்டுக்கொண்டு வேலை செய்வோம். பின்பு வார இறுதிகளில் நான் தேனியிலிருக்கும் என்வீட்டிற்கு சென்றுவிடுவேன். அவன் அருப்புக்கோட்டையிலிருக்கும் அவனுடைய வீட்டிற்கு சென்றுவிடுவான். ஆரம்பத்தில்தான் இப்படியிருந்தது நாட்கள் ஆக ஆக வீட்டிற்கு மாதமொருமுறை மட்டுமே சென்று வந்தோம் விடுமுறை நாட்களில் மதுரையிலிருக்கும் ஒவ்வொரு ஏரியாவையும் சுற்றுவது, சினிமாவுக்கு செல்வது , அரட்டையடிப்பது இப்படி மிகவும் மகிழ்ச்சியாகவே இருந்தது.

அப்பொழுது திருப்பரங்குன்றம் தியாகராசர்கல்லூரி காம்பஸில் இருக்கும் தேன்கிணறில் பணிபுரிந்த சமயம் அருகிலிருந்த தியாகராசர்கல்லூரி பேருந்துநிலையத்தில் அமர்ந்து சைட் அடித்துக்கொண்டே அருகிலிருக்கும் டீக்கடையில் டீ சாப்பிட்டுக்கொண்டிருக்கும்பொழுது என்னுடைய டீயில் ஈ விழுந்துவிட்டது வேற டீ சொல்லவாடான்னு கேட்டான் மண்ணுல இருந்து வர்ற தண்ணியில ஏதேதோ விழுந்து கிடக்குது அதையே குடிக்கிறோம் ஆஃப்ட்ரால் ஈதானடான்னு ஈயத்தூக்கிப்போட்டு டீயகுடிக்கறதுல தப்பேயில்லையென்று லாஜிக் இல்லாமல் எதையோ சொல்லப்போக இன்றுவரைக்கும் என்னை கும்முவதற்கு அதை பயன்படுத்துகிறான். 

ஒரு நாள் மொபைலில் யாரையோ சத்தமாக திட்டிக்கொண்டிருந்தான் யார்டா அது ஏன் திட்டறன்னு கேட்டால் அது தன்னுடைய மாமன் மகளென்றும் அவள் தன்னை காதலிப்பதாகவும், அது தனக்கு பிடிக்கவில்லையெனவும் அதனால்தான் திட்டினேன் என்றான். சின்னக்குழந்தையில நான் தூக்கி வைத்து விளையாடிய பொண்ணுடா காதலியா பார்க்க மனசு வரலை அதான் நல்லா திட்டிவிட்டுட்டேன்னு சொன்னான். நாளாக நாளாக அந்தப்பெண் இவனுக்கு தரும் அன்புத்தொல்லைகள் அதிகமாகிக்கொண்டேதான் சென்றதே தவிர குறையவேயில்லை இவனும் மசியவில்லை.அந்தப்பெண்ணிடம் என்னைப்பற்றி கூறியிருப்பான் போலும் ஒரு நாள் இந்தாடா உன்கிட்ட பேசணுமாம் பேசு என்று மொபைலை என்கையில் கொடுத்துவிட்டான் பேசிய அந்தப்பெண் அண்ணா நான் தான் சரண்யா பேசறேண்ணா அவருக்கு நீங்களாவது எடுத்துச் சொல்லக்கூடாதா நான் அவங்கள விரும்புறேன் அண்ணா அவங்களை எப்படியாவது சம்மதிக்க வைங்களேன் என்று கூறினாள்.

இதுவரையிலும் அவனை எங்குமே நவநீ நவநீ என்று அழைத்துவந்த நான் அந்தப்பெண் என்னை அண்ணாவென்று கூறியதிலிருந்து அவனை மாப்ள என்று அழைக்கலானேன். மாப்ள ஏண்டா ஒரு பொண்ணு இம்புட்டு தூரம் உன்மேல ப்ரியம் வச்சிருக்கா நீ என்னடான்னா அதை உதாசீனம் பண்ற ஆனாலும் உனக்கு இம்புட்டு வீம்பு ஆகாதுடான்னு மட்டுமே சொல்ல முடிந்தது, அவனுடைய மனசை மாற்றமுடியவில்லை. ஒருநாள் பழங்காநத்தத்திலிருக்கும் ஜெயம் தியேட்டரில் நான் இவன் இன்னொரு நண்பன் மூவரும் சேர்ந்து பருத்திவீரன் படத்திற்கு சென்றிருந்தோம். படம் முடிந்து வந்ததிலிருந்து இவனுடைய நடவடிக்கைகளில் சில மாற்றங்கள் தெரிந்தது. மாப்ள ஒகே சொல்லிட்டேண்டா என்று சில நாட்கள் கழித்து அவன் சொன்னதும் மிகவும் மகிழ்ச்சியாகவே இருந்தது . எப்படிடா மாப்ள என்றதும் பருத்திவீரன் படம் பார்த்ததிலிருந்து ஒரு மாதிரியாகிடுச்சுடா மாப்ள அதான்ன்னு வழிஞ்சான். இப்பவும் பருத்திவீரன் படமோ பாடல்களோ பார்க்கும்பொழுது இவனுடைய அந்த வழியல் ஞாபகம் வந்து எனக்குள்ளே நமுட்டு சிரிப்பு சிரித்துக்கொள்வேன். திரைப்படங்கள் மனித மனங்கள் வரை ஊடுருவிச்செல்லும் என்பது அப்பொழுதுதான் எனக்கு தெரிந்தது. அதற்கு பிறகு மாப்ளையின் மொபைல் பில்லோடு சேர்ந்து காதலும் செழித்து வளர்ந்தது.

காதல்னா எதிர்ப்பு இருக்கத்தானே செய்யும் இவர்கள் காதலுக்கும் எதிர்ப்பு இருந்தது, இவன் வீட்டில் எந்தபிரச்சினையும் இல்லை அந்தப்பெண் வீட்டில் கடும் எதிர்ப்பு . இவனும் அவர்கள் வீட்டில் சொன்ன அந்தஸ்து பிரச்சினைக்காகவே வெளிநாடு சென்று நல்ல ஒரு நிறுவனத்தில் நல்ல சம்பளத்தில் பணிபுரிந்தான். அதற்குபிறகும் அவர்கள் வீட்டில் எதிர்ப்பு சொல்லியே வந்தனர். அவர்களிடம் நேரில் சென்று பேசிப்பார்த்துவிடுவது அதாவது இரண்டில் ஒரு முடிவு தெரிந்து கொள்வதற்கு ஊருக்கு சென்று எப்படியோ அவர்கள் வீட்டில் சம்மதம் வாங்கிவிட்டான். இதோ இன்று அவனுக்கு திருமணம் என்னால் மாப்பிள்ளை தோழனாக கூட இருக்கமுடியவில்லை. என் வாழ்க்கையில் நான் இழந்த மிக முக்கியமான தருணங்களில் இதுவும் ஒன்று.கண்ணீர் வரத்தான் செய்கிறது அது இயலாமையால் வந்தது அல்ல நாம பார்த்து வளர்ந்த காதல் வெற்றிபெற்று கல்யாணத்தில் முடியுறப்போ கூடவே இல்லாமல் போய்விட்டோமே என்ற ஆதங்கம் கேவல் அவ்வளவே மற்றபடி இந்த திருமணத்தால் அளவுகடந்த  ஆனந்தமடைந்தவன் என்ற முறையில் பெருமையெனக்கு. என் வாழ்த்துகளை என் அம்மா அப்பா உன்னிடம் சேர்த்துவிடுவார்கள் ஏற்றுக்கொள்டா மாப்ள..!

சரண்யா நீ நினைச்சத சாதிச்சிட்ட பார்த்தியா இதேமாதிரியே எல்லா விஷயத்திலும் மன உறுதியோடு இருந்தா கண்டிப்பா வெற்றி நிச்சயம். மாப்ளைய கண்கலங்காம பார்த்துக்கம்மா ...!

சரண்யாநவநீதகிருஷ்ணன் இருவருக்கும் இல்லறம் சிறக்க , இன்பங்கள் வந்திட துன்பங்கள் பறந்திட மனம் நிறைந்த மணநாள் வாழ்த்துகள் நீங்கள் இருவரும் இன்று போலவே என்றும் மகிழ்ச்சியுடன் இருக்க எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். GOD BLESS YOU..!


Post Comment