ரதி வீதி - பாகம் 1

| May 28, 2011 | |

அழகி, பேரழகி, தேவதை, நிலா இந்த வார்த்தைகளுக்கு பொருந்திய உன்னுடைய அழகை மேற்க்கொண்டு விவரிக்க வார்த்தைகளற்று திரியும் எனக்கும் நீ சரியாய் பொருந்திப்போனதுதான் ஆச்சரியம்.

குட்டிக்குட்டி பெண் குழந்தைகளை தன் மடியில் அமர்த்தி தன்னுடைய இறக்கையிலிருந்து ஒரு இறகை பிய்த்து குழந்தைகளுக்கு தந்து அவர்களையும் தேவதைகளாய் ஆக்குகிறாள் தேவதையொருத்தி, என்னை உன் கையிலிருந்து கோடாரி பெற்றுக்கொள்ளும் விறகுக்காரனாவது ஆக்கிவிடு என்ற மாத்திரத்தில் தன்னுடைய இறகால் வருடிக்கொடுத்து என்னை தேவதை தாசனாக்கிவிட்டாள்.

காய்ச்சல் இருமல் தும்மல் போன்ற உணர்வுகளைப்போல் உன்னைப் பார்க்கும்பொழுதெல்லாம் வரும் ஒருவித மயக்க உணர்வுக்கு பெயர் தேடிக்கொண்டிருக்கிறேன் கிடைத்தபாடில்லை , நீயே சொல்லிவிடு என்றால் ஐ லைக் யூ என்று சொல்லிப்போகிறாய்.

கவிதையில் உவமை சம்மனமிட்டு அமர்ந்து கவிதையோடு சேர்ந்து தானும் அழகாவது போல் உன் முகத்திலிருக்கும் மூக்குத்தியும் உன்னோடு சேர்ந்து அழகாகிறது.

பிரிக்க முடியாதது எதுவென்ற உன் திருவிளையாடல் கேள்விக்கு உன்னையும் அழகையும் என்ற பதில் சொல்லி உன்னிடம் ஆயிரம் முத்தங்கள் வாங்கலாமென்று பார்த்தால் நெற்றியில் ஒற்றை முத்தமிட்டுவிட்டு நெற்றியிலிட்டாலும் முத்தம் முத்தமே  என்று ஏக வசனம் பேசுகிறாய்.

நாளைக்கு சென்னை போகிறேன் என்றவளிடம் அப்போ நாளையிலிருந்து நீ இருக்கும் வரை அது சிங்காரச்சென்னையல்ல சிங்காரிச்சென்னை என்று சொல்லி ஒரு கட்டியணைப்பு பரிசில் பெற்றேன்.

ஹோம்சிக் வந்து விடுமுறை கேட்டால் உடனே விடுப்பளித்துவிடும் மேலாளரிடம் உன்சிக் வந்திருப்பதை சொன்னால் மட்டும் முறைக்கிறார், அவருக்கெப்படி தெரியும் இரண்டு சிக்கும் நீதான் என்று.

கோவில் பிரகாரத்தைச்சுற்றியிருக்கும் ரத வீதிகள் எல்லாம் நீ நடந்து வரும்பொழுது  ரதிவீதிகளாக மாறிப்போகின்றன. 

Post Comment

ரதி பதியன் - ஒரு காதலியின் புலம்பல் !!!

| May 20, 2011 | 35 comments |
ஒரு நாள் வானவில்லை வரைந்து காட்டுகிறேன் வா என்று ஓவிய அறைக்கு கூட்டிப்போனான் அங்குள்ள சுவரில் வானவில்லை அழகாய் வரைந்தான் ஆனால் அவன் வரைந்ததில் ஆறு வண்ணங்கள்தான் இருந்தன என்னடா வானவில் வண்ணங்கள் ஏழுதானே நீ ஆறல்லவா வரைந்திருக்கிறாய் மஞ்சள் நிறம் எங்கே என்று கேட்டேன் அதுவா இப்படி கிட்ட வா என்று சொல்லியபடி மஞ்சள் நிற இடத்தில் என்னை நிரப்பி இப்பொழுது பார் ஏழு வண்ணமும் இருக்கிறதா இல்லையா என்றவனை கன்னாபின்னாவென்று கட்டிக்கொண்டேன். இவன் இப்பொழுது மட்டுமல்ல நிறைய முறை இப்படித்தான் "அழகிய நட்சத்திரங்களுடன் கூடிய வானத்தை வரைந்துவிட்டு நிலவை வரையாமல் அதற்கு பதில் என்னை நிறுத்தி வைப்பான், வெறும் இலை , தண்டுடன் கூடிய செடியை வரைந்துவிட்டு மலருக்கு பதில் அங்கே என்னை நிரப்புவான் " இப்படி இவனுடைய லூசுத்தனமான அழகான செயல்களாலயே எனக்கு இவனை நிறைய பிடித்துப்போகிறது.

அன்று வெள்ளிக்கிழமை என்பதால் அருகில் ஆற்றையொட்டி இருக்கும் சிவன் கோவிலுக்கு இருவரும் சென்றோம் . நான் பச்சைக்கலரில் பட்டுச்சேலை அணிந்திருந்தேன் அவனும் பட்டு வேஷ்டி பட்டுச்சட்டையுடன் கம்பீரமாகவே என்னுடன் வந்தான். கோவிலுக்குள் செல்வதற்கு முன் ஆற்றில் கை கால்களை அலம்ப வேண்டும் என்ற சாஸ்திரப்படி ஆற்றில் நான் இறங்கியதுதான் தாமதம் அருகிலிருந்த அவன் "பச்சைப்பட்டு உடுத்தி அழகி ஆற்றில் இறங்கிவிட்டாள்" என்று கத்தி கூப்பாடு போட்டதில் சுற்றியிருப்பவர்கள் ஒரு மாதிரியாக பார்க்க எனக்கோ வெட்கம் தாங்க முடியாமல் அப்படியே அவனை ஆற்றில் தள்ளிவிட்டுவிட்டேன் தொப்பல் தொப்பலாக நனைந்து போனான். நானும்தான் அவனுடைய அதீத அன்பில் தொப்பல் தொப்பலாக நனைந்து போயிருக்கிறேன்.

இவன் முகத்தில் ஓவியம் வரையும் கலை கற்றிருக்கிறான் என்பது எனக்கு வெகு நாட்களுக்கு பின்பு தெரிய வந்த பொழுது எங்கே என் முகத்தில் ஓவியம் வரையேன் என்றேன் . உன்னுடைய முகம் கொஞ்சம் தட்டையாக இருப்பதால் உலக வரைபடத்தை வரைகிறேன் என்று அட்லஸை என் முகத்தில் வரைய ஆரம்பித்தான் . வரைந்து முடித்ததும் என்ன்னை நிலைக்கண்ணாடி முன்னாடி முன் கூட்டிச்சென்று காட்டினான் . சும்மா சொல்லக்கூடாது அழகாக சின்ன சின்ன தீவுகள் முதற்கொண்டு எதுவும் விடாமல் எல்லாவற்றையும் மூக்கிலிருந்து மேற்புற பகுதிகளிலேயே வரைந்து முடிந்திருந்தான். ஒரே ஒரு தப்பு செய்திருந்தான் அண்டார்டிகா கண்டத்தை வரையாமல் அந்த இடத்தில் சின்ன சின்ன பென்குவின்களை வரைந்திருந்தான் . எங்கடா அண்டார்டிகா கண்டம் காணோம் ஒரே பென்குவினா இருக்கு என்றேன் மெல்ல சிரித்துக்கொண்டே "உன் உதடும் அதற்கு கீழும் எல்லாமே குளிர் பிரதேசம்தானே" அதான் அப்படியே விட்டு விட்டேன் என்றவனை என்ன செய்யலாம் என்று நினைத்து கொண்டிருக்கும் பொழுதே என் முகத்திலிருந்த ஒரு பென்குவின் அவன் முகத்திற்கு இடம் மாறியிருந்தது.

எங்கள் இருவருக்கும் திருமணம் முடிந்து இவனுடைய என் வீட்டிற்கு வந்ததும் வீட்டில் சிற்சில மாற்றங்கள் செய்ய ஆரம்பித்திருந்தான். அதில் முதலாவதாக வீட்டின் முகப்பில் அவன் பெயர்போட்டு இல்லம் என்று இருந்த பலகையை எடுத்துவிட்டு ரதிவீடு என்று மாற்றியிருந்தான். வரவேற்பறையில் தேவதை உலாவும் இடம் என்று எழுதியிருந்தான்.  " ரகு பதி என்ற அவன் பெயரை ரதிபதி என்று சட்டப்படி பெயர் மாற்றுவதற்குரிய விண்ணப்பங்களை வாங்கி வந்திருந்தான்" . ஏண்டா இப்படி லூசுத்தனமா எதுனாலும் செய்துட்டு இருக்க என்றேன் எல்லாம் என் தலையெழுத்து என்று நெற்றியை பிடித்தவனின் கைகளை தட்டி விட்டேன் நெற்றியில் என் பெயரை எழுதி வைத்திருக்கிறான். இப்போ சொல்லுங்கள் இவனுக்காக என் உயிரை தரலாமா இல்லையா அதுதான் இவனுக்கு ஒரு குழந்தை பரிசாக தரலாமென்று முடிவெடுத்துவிட்டு அதை அவனிடம் சொன்னால் "ரோஜா பதியன் மாதிரி ரதி பதியன் போடலாமென்கிறாய் சரி வா என்று குதூகலப்படுகிறான்".

இவன் ஓவியன் மட்டுமல்ல சிலநேரங்களில் அழகான கவிதைகளும் எழுதுவான் ஒரு நாள் இவனுடைய லூசுத்தனமான செயல்களை என் கழுத்திலிருந்த தங்க சங்கிலியை வாயில் வைத்து கடித்தபடி ரசித்துக்கொண்டிருந்தேன் அப்பொழுது அவன் எழுதிய கவிதை 

"கழுத்தில் போட்டிருந்த
தங்க சங்கிலியை 
வாயில் வைத்து 
கடித்துக்கொண்டிருக்கிறாள் 
இனம் இனத்தோடுதான் 
சேரும்"

இப்படி என்னை மட்டுமே ரசிக்கும் என்னை மட்டுமே தன் உலகமாய் எண்ணி வாழும் இவன் எனக்கு கிடைக்க நான் கொடுத்துதான் வைத்திருக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டு அவனிடம் ஏண்டா இப்படி இருக்க என்று செல்லமாய் கேட்டு அவன் நெற்றியில் மென் முத்தம் பதித்தேன்..! 

Post Comment

T - Shirt வாசகங்கள் தமிழில் (18+)

| May 3, 2011 | 26 comments |
ஆங்கில வாசகங்களையுடைய டீ ஷர்ட்களை பார்த்து பார்த்து போரடித்துவிட்டது அதுதான் ஒரு மாற்றத்திற்கு தமிழில் டீ ஷர்ட் வாசகங்களை முயற்சி செய்தால் என்ன என்று தோன்றியதால் வந்த பதிவு இது. நீங்களும் உங்களுக்கு தோன்றிய வாசகங்களை பின்னூட்டத்தில் தெரிவியுங்கள் அடுத்தமுறை பதிவில் ஏற்றிவிடலாம் , வாசகங்கள் முக்கியமாக ஆண்பாலுக்கா பெண்பாலுக்கா என்பதையும் தெரிவித்துவிடுங்கள் . Deal !!

Post Comment