ஒரு சினிமா விமர்சகரின் பரிதாப வாழ்க்கை...!

| February 25, 2011 | 32 comments |

மனைவி : என்னங்க நீங்கதான் சினிமாவுக்கெல்லாம் விமர்சனம் எழுதுறீங்களே திருமணத்துக்கு முன்னாடி நீங்க என்னை பொண்ணு பார்க்க வந்தப்போ என்னைப்பார்த்து விமர்சனம் எழுத சொல்லியிருந்தா எப்படி எழுதியிருப்பீங்க?

விமர்சக கணவன் : ஆவ்வ்வ்வ் சொந்த செலவுல சூனியம் வச்சிக்க சொல்றியா? 

மனைவி : இப்போ நீங்க எழுதலை இனிமேல் ஒரு வேளை சாப்பாடு கட் ஆகிடும் பரவாயில்லையா?

விமர்சக கணவன் : எழுதுனா மூணு வேளை சாப்பாடும் கட் ஆகிடுமேன்னு யோசிக்கிறேன்டி ஆவ்வ்!!!!

மனைவி :  அது உங்க விமர்சனத்தைப்பொருத்து இருக்கு இப்போ எழுதப்போறீங்களா இல்லையா?

விமர்சக கணவன் : எழுதுறேன் படி

திருமதி . சுப்புலட்சுமி ராமசாமி தயாரிப்பில் கொன்னவாய் திரு. ராமசாமி அவர்கள் இயக்கி வெளிவந்திருக்கும் மிஸ்.மோனலிசா மனிதப்படம் பற்றிய ஒரு பார்வை. இந்த திரைப்படத்தை இயக்கியிருக்கும் கொன்னவாய் ராமசாமி அவர்கள் ஒரு ரசனையானவர் என்பதை இப்படம் விளக்குகிறது. கண்களுக்கு கூட உயிரிருக்கும் என்பதை அவளது துறு துறு கண்கள் விளக்குகிறது.பொதுவா ''எல்லா குழந்தையும் பிறக்கும்போது அழும் ஆனா இந்த குழந்தை பிறக்கும்போதே அழகாகியிருக்கிறது''.அவ்ளோ அழகு, மீதி அழகை நீங்களே பூமித்திரையில் பார்த்துக்கொள்ளுங்கள்.பிறகு வளரும்பொழுது உடல்கதையோடு குணக்கதையும் அளவாக டைரக்டர் சேர்த்திருப்பதால் திமிர்,துடுக்குத்தனத்தை சில இடங்களில் அழகையும் மீறி ரசிக்க முடிகிறது. எனக்கே இவள் கிடத்திருப்பதால் முடிவு கொஞ்சம் சோகமானதுதான் எனக்குமட்டும் .

மனைவி : ஒகே ஒகே பரவாயில்லை மூணு வேளையும் சோறு கிடைக்கும் இந்த விமர்சனத்துக்காக தினமும் ஒரு வேளை சாப்பாட்டோட எக்ஸ்ட்ராவா ஃபில்டர் காபியும் போட்டுத்தர்றேன் . எங்கப்பாவ கொன்னவாய்ன்னு திட்டுனதுக்காக காலையில நீங்க குடிக்கிற டீய கட் பண்ணிட்டேன்.

விமர்சன கணவன் : ஹும் :(

மனைவி : சரி சரி அடுத்து இப்போ நீங்க சாப்பிட்டீங்களே தோசையும் தக்காளி சட்னியும் அதுபத்தி விமர்சனம் எழுதுங்க அந்த டீய கட் பண்றதா வேணாமான்னு யோசிக்கிறேன் .

விமர்சன கணவன் : உலக வரலாற்றிலேயே தோசைக்கு விமர்சனம் எழுதுன ஆள் நானாத்தான் இருப்பேன் போல சரி சரி எவ்ளவோ எழுதிட்டோம் இத எழுத மாட்டோமா?

தோசை & சட்னி விமர்சனம்

வழக்கமா எல்லாரும் சுடற மாதிரிதான் நீயும் சுட்டுருக்க. என்ன மத்தவங்க தோசைய வட்டமா சுடுவாங்க, நீ தட்டையா சுட்ருக்க இதுக்கு காரணம் யூஸ் பண்ண கரண்டியா? இல்லை உனக்கு வட்டம்னா என்னன்னு தெரியாதான்னு தெரியலை. ஆனாலும் தோசைக்கு வடிவமா முக்கியம் ருசிதான் முக்கியம்ன்ற மாதிரி தோசைக்கு ஆட்டுன மாவுல சேர்த்த உப்பு, தோசை சுடறப்போ சேர்த்த எண்ணெய் இதெல்லாம் கரெக்டா சேர்த்திருந்ததுனால தோசை ருசியா வந்திருக்கு. என்ன அதுக்கு மேட்சா வச்சிருந்த தக்காளி சட்னி தான் பொருந்தலை தோசைக்கு மட்டன்குழம்பு வச்சிருந்தா மேட் ஃபார் ஈச் அதர் அதாவது நம்மள மாதிரியே இருந்திருக்கும், ஜஸ்ட் மிஸ். ''வானத்துல இருக்குற நட்சத்திரத்தை எப்படி எண்ண முடியாதோ அது போலவே இந்த தோசையில இருக்குற ஓட்டைகளையும் எண்ண முடியாதுன்னு தத்துவமா சுட்ருக்கதுலதான்'' உன்னோட டைரக்சன் திறமைய காட்டியிருக்கடி.

மனைவி : இனி மேல் தோசைக்கு சட்னி மட்டும்தான் , மட்டன் குழம்பு வப்பேன்னு கனவுல கூட நினைச்சிடாதீங்க மட்டன் குழம்பு மட்டுமில்ல சட்னி கூட கிடையாது வெறும் தோசையதான் திங்கணும் ஆமா !!!

விமர்சன கணவன் : ஹும் இதுக்கெல்லாம் காரணம் அந்த கனவுதான் உன்னையெல்லாம் பார்க்குறதுக்கு முன்னாடியே கனவுல வந்த இலியானாவே எனக்கு மனைவியா வந்திருந்தா இதெல்லாம் நடந்திருக்காது எல்லாம் விதி வலியது.

மனைவி : ஆச தோச அப்பள  வடை இவரு பெரிய மன்மதரு இவருக்கு நான் கிடைச்சதே பெரிய விஷயம் இதுல இலியானா கேட்குதாம்ல இலியானா?. இலியானாவே கிடைச்சிருந்தாலும் உங்களுக்கு இந்நேரம் தோசை சாப்பிடவா நேரம் கிடைச்சிருக்கும் அவளுக்கு மேக் அப் போட்டு விடறதுக்கே உங்களுக்கு நேரம் சரியா போயிருந்திருக்கும்.இப்போதான தெரியுது டிவியில இலியானா பாட்டு போட்டா ஆன்னு வாய திறந்து பாக்குறது எதுக்குன்னு,''இனிமேல் மவனே டிவியில இலியானா பாட்டு ஓடுச்சு உங்களுக்கு தரிகினதரிகின நடக்கும்'' ஆமா சொல்லிட்டேன்.

விமர்சன கணவன் : இன்னிக்கு நான் முழிச்ச நேரமே சரியில்ல சினிமாக்கு போயிருந்தா இந்நேரம் ஒரு விமரசன் எழுதி என்னோட பிளாக்குக்கு பத்தாயிரம் ஹிட்ஸ் அம்பது ஓட்டு வாங்கி பொழுது நல்லா போயிருந்திருக்கும் தேவையில்லாம உனக்கும் உன் தோசைக்கும் விமர்சனம் எழுதி ''எனக்கு ஹிட்டு கிடைச்சதுதான் மிச்சம்'' . இனிமேல் சினிமாவத்தவிர எதுக்குமே விமர்சனம் எழுத மாட்டேண்டி ஆளவிடு.

மனைவி: அதெப்பிடி அவ்ளோ சீக்கிரம் விட்ருவேனா இன்னிக்கு நைட் வைக்கப்போற பிரியாணிக்கும் நீங்கதான் விமர்சனம் எழுதணும்.

விமர்சன கணவன்: என்னது பிரியாணியா ஆவ்வ்வ்வ்.எனக்கு பிரியாணி பிடிக்கும்ன்னு உன்னை அடிக்கடி பிரியாணி வைக்க சொல்றதுக்கு வைக்கப்போற ஆப்பாத்தான் தெரியுது எனக்கு ஆளா விடு தாயி நான் தியேட்டருக்கு போறேன். ஆமா நான் உன்னை விமர்சனம் பண்ணி எழுதுனேனே நீ என்னை பத்தி விமர்சனம் எழுதக்கூடாதா ?

மனைவி : எனக்கு விமர்சனம் எல்லாம் எழுத தெரியாது !!

விமர்சன கணவன் : அட்லீஸ்ட் அழகான என் பேரைப்பத்தியாவது சொல்லுடி.

மனைவி : வசந்த்ன்ற பேரெல்லாம் அழகா ? கொசந்த்ன்னு வச்சிருந்தா நல்லா இருந்திருக்கும் !!!!

விமர்சன கணவன் :ஙே...!!!!!!!!!!!!!

Post Comment

ஆணி வியாபாரியாகலாம் வாங்க...!

| February 21, 2011 | 56 comments |

''எல்லாரும் எல்லாமும் ஆகிவிடுவதில்லை'' ஒரு நணபர் நீங்க ஒரு ஆணி வியாபாரியாக இருந்தால் எப்படி வியாபாரம் பண்ணியிருப்பீங்க என்பதை பதிவில் எழுதுங்களேன் என்றார். நானும் முயற்சி பண்ணியிருக்கேன் இது எல்லாமே எல்லாரும் ஃபாலோ பண்றதுதான்... நான் ஆணி வியாபாரம் செய்திருந்தால் என்னவெல்லாம் செய்திருப்பேன் எப்படியெல்லாம் வியாபாரத்தை பெருக்கியிருப்பேன்?? என்ற கற்பனை. என்னடா ஆணி வியாபாரம் அப்படின்னு சுளுவா நினைச்சிடாதீங்க..இந்த ஆணிக்கும் எனக்கும் இருக்கும் உறவு பற்றி Behind the postல் சொல்கிறேன்..

கடை இட தேர்வு மற்றும் அமைப்பு
முதலில் வியாபாரம் நடத்த ஏதுவான இடம் தேர்ந்தெடுக்க வேண்டும். இனம் இனத்தோடு சேருமாறு பார்த்துக்கொள்ளவேண்டும் ஆம் ஆணிக்கடையை மெடிக்கல் ஷாப்பிற்க்கு பக்கத்திலோ இல்லை காய்கறிக்கடைக்கும், மளிகைக்கடைக்கும் அருகிலோ அமைக்க எனக்கு மனம் வரவில்லை . ஆதலால் விலை அதிகமாக இருந்தாலும் பரவாயில்லை என்று வீடு கட்டுவதற்க்கு தேவையான மர விற்பனை கடை,மற்றும் ஹார்டுவேர் ஷாப்களுக்கு அருகில் ஆணிக்கடைக்கான இடத்தை வாங்கியோ இல்லை வாடகைக்கோ கடை பிடித்துவிட்டேன். கடைக்குள் ஆணிகளை அதன் அளவு வாரியாக பிரித்து வைக்கும் அடுக்குகள்(கப்போர்ட்கள்) செய்து, வர்ணங்களும் பூசிவிட்டேன் இந்த வர்ணங்கள் கண்ணுக்கு உறுத்தாத அளவிற்க்கு இருக்கும்படி இளம்பச்சை நிறம் அடித்தாகிவிட்டது.அடுத்து கடை விளம்பர பலகையும் அமைக்க வேண்டும் அதிலும் ஆணி சம்பந்தப்பட்டு இருக்க வேண்டும் அதுவும் அமைத்துவிட்டேன்.

விலைப்பட்டியல்

அடுத்து வாடிக்கையாளர்களுக்கு கடையில் விற்கப்படும் ஆணிகளின் அளவும் விலையும் தெரியப்படுத்தும் விலைப்பட்டியல் கடையின் முகப்பில் இருக்கும்படி பார்த்து கொள்ள வேண்டும்.ஏனென்றால் வாடிக்கையாளர்கள் தாங்கள் கொண்டு வந்த பணத்திற்க்கேற்ற அளவு மட்டுமே வாங்கி கொள்வதற்கு வசதியாக இருக்கும்.

கொள்முதல் .


கடை அமைத்தாகிவிட்டது அடுத்து கடையில் விற்பதற்கு தேவையான ஆணிகளை மொத்த விலைக்கு வாங்க வேண்டும். மொத்த விற்பனையாளரிடம் நான் என்னை அறிமுகப்படுத்திக்கொண்டு என்னுடைய வியாபார நுணுக்கங்கள் சிலவற்றையும் அவரிடம் கூறி வாங்கிய ஆணிகளுக்கான முழுப்பணத்தையும் அவரிடம் முடக்கிவிடாமல் பகுதி மட்டுமே கொடுத்துவிட்டு ஆணிகளை வாங்கி வந்து கடையில் அளவு வாரியாக பிரித்து வைத்தேன். அப்படி பிரித்து வைக்கும்பொழுதே சில யோசனைகள் தோன்றியது ஆணிகளை ஒருகிலோ மற்றும் இரண்டுகிலோ பேக்கேஜ்களாக செய்து அடுக்கி வைத்தால் வாடிக்கையாளர்கள் கடைக்கு வந்து எடைபோட்டு பொட்டலம் கட்டும்வரை காக்க வைப்பதை தவிர்க்கலாம் . ஏதேனும் வாடிக்கையாளர்கள் சந்தேகப்பட்டால் கடையின் முன் டேபிளில் இருக்கும் எடை இயந்திரத்தில் வைத்து எடை சரியாக இருப்பதையும் காட்டலாம்.


விளம்பரம் & சலுகைகள்
காட் என்னதான் கடையில் தரமான ஆணிகள் விலைகுறைவாக விற்றாலும் ஆணிகள் விற்கும் என்கடையை பலருக்கும் தெரிய வைப்பதற்க்கு விளம்பரமும் சில சலுகைகளும் தேவைப்பட்டது யோசித்தேன்.ஒரு கிலோ இரண்டுகிலோ ஆணி பேக்குகளில் கடையின் பெயரை அச்சடித்தேன், கடையில் ஆணி வாங்க வரும் கஸ்டமர்களிடம் எங்களிடம் வாங்கும் ஆணி பேக்குகளில் ஒரு பத்து காலியான பேக்குகள் கொண்டுவந்தால் கால் கிலோ ஆணி இலவசமாக தரப்படும் என்று வாய்வழி விளம்பரம் செய்தேன். அதையே ஒரு விளம்பர போர்டில் எழுதி கடை வாசலில் மாட்டினேன்...


அடுத்து கடையினைப்பற்றிய விளம்பரங்கள் அடங்கிய போஸ்டர்கள் ஊரெங்கும் ஒட்டப்பட்டது. இது எல்லாருமே பின்பற்றுவதுதான் இதற்கு அடுத்து வரப்போபவைகள் யாரேனும் செய்திருக்கிறார்களா தெரியாது, பார்ப்போம்..

ஆணி வாங்குபவர்களுக்கு சில சலுகைகள்


இதுவரைக்கும் செய்த சில விளம்பரங்கள் சலுகைகள் வைத்து ஓரளவு கடை நஷ்டத்தில் இயங்காமல் எனக்கு வரக்கூடிய மாத வருமானத்தோடு சென்று கொண்டிருந்தது. பொதுவாக ஆணிகளை வாங்க வருபவர்களில் பெரும்பாலானோர் கார்பெண்டர்களாக இருப்பார்கள்.அவர்களை அடிக்கடி நம் கடைக்கு வரவழைக்க அவர்களுக்கு தேவையான ஆணிக்கும் சம்பந்தப்பட்டிருக்கும்படி ஒரு பொருளை அவர்களுக்கு அன்பளிப்பாக கொடுக்க ஆரம்பித்தேன் அது என்ன பொருள் என்று கேட்கிறீர்களா? ஆணிகளை போட்டு வைக்கும் லெதர் பை இந்த லெதர் பை உயரமான கட்டிடங்களில் வேலை செய்பவர்கள் மெசர்மெண்ட் டேப் மற்றும் பென்சில்கள் வைத்து இடுப்பில் கட்டி வேலை செய்ய ஏதுவாக இருக்கும். இதனால் ஆணிகள் அடிக்கடி எடுத்து சிதறி வீணாவது தடுக்கப்படும்.


ஆணிகளை வாயில் வைத்து கொண்டு ஆணி அடிக்கும் கார்பெண்டர்களை பார்த்திருப்பீர்கள் அவர்களுக்கு ஆணிகளையும் பென்சிலையும் மீட்டரையும் ஒரே இடத்தில் வைத்து க்கொள்ளவும் இலகுவாகவும் இருக்கும் இந்த பை இதற்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது.இந்த லெதர் பேக்கிலும் கடையின் விளம்பரம் இருக்கும்படி பார்த்துக்கொண்டேன். ஓரளவு இந்த யுக்தியும் பரவலாக பயன் பட்டது அதிகப்படியான கார்பெண்டர்கள் கடைக்கு வர ஆரம்பித்திருந்தனர் அவர்கள் வாங்கும் ஆணிகளின் எண்ணிக்கைக்கேற்ப லெதர் பைகள் கொடுத்தேன்.இந்த லெதர்பைகளுக்கான விலையை கடையில் வரும் லாபத்தில் இருந்தே எடுத்தேன் முதலில் இருந்து எடுக்கவில்லை.

இன்னும் ஆணிகளை வள வள கொல கொலவென்ற சுத்தியல்களில் அடித்தால் ஒன்று கையில் அடிபடும் இல்லை ஆணி தெறித்து ஓடும் ஆதலால் ஆணியை கச்சிதமாக அடிக்க ஒத்தக்கண் சுத்தியல்கள் ஒருபக்கம் ஆணிகளை லாவகமாக பிடுங்கும் சுத்தியல்களை , சுத்தியல் தயாரிக்கும் இடத்திலிருந்து வாங்கி வந்து கடையில் விற்பனைக்கு வைத்தேன்.இந்த சுத்தியல்களை பற்றியும் கார்பெண்டர்களிடம் அறிமுகப்படுத்தினேன். இந்த சுத்தியல்களுக்கு கார்பெண்டர்களிடம் இருந்து நல்ல வரவேற்பு கிடைத்து சுத்தியல் விற்பனையும் கணிசமான லாபத்தை கொடுத்தது.

வாடிக்கையாளர் குறைகள்

ஆணிகள் அடிக்கடி வாங்கிச்செல்லும் வாடிக்கையாளர்கள் ஒரு கிலோ ஆணியில் நூறு கிராம்கள் ஆணிகளில் கொண்டைகள் இருப்பதில்லை என குறைகள் கூறினர்.இது நானும் கவனிக்கவில்லை உடனடியாக இந்த விஷயத்தை மொத்த கொள்முதல் வியாபாரியிடம் எடுத்துச்சென்று ஆணி தயாரிக்கும் தொழிற்சாலையில் இருக்கும் டெஃபெக்ட்டுகள் மூலம் இது ஏற்படுவது கண்டுபிடிக்கப்பட்டு குறை நிவர்த்தி செய்யப்பட்டது.இப்பொழுதெல்லாம் குறைகள் வருவதில்லை. மேலும் பழைய வளைந்த ஒடிந்த ஆணிகளை வாங்கி அதற்கு பதில் பாதிவிலையில் புதிய ஆணிகளை தரும் திட்டத்தையும் செயல்படுத்திப்பார்த்தேன் சொல்லிக்கொள்ளும்படியான முன்னேற்றம் இல்லாததால் அதை அப்படியே நிறுத்தி வைத்தேன்..

கடை இப்பொழுது ஓரளவு சொல்லிக்கொள்ளும்படியான இலாபத்தை தந்துகொண்டிருந்தது இந்த இலாபத்தொகையை வங்கியில் முடக்கிவிடாமல் கடையின் விஸ்தரிப்புக்கு பயன்படுத்திக்கொண்டேன் ஏற்கனவே இருக்கும் கார்பெண்டர்களின் ஆதரவுகளோடு வசந்த் ஹார்ட் வேர் ஷாப்பாக மாற்றி புதிய கட்டிட வேலைகளுக்கு தேவையான இரும்பு சாமான்கள் அனைத்தையும் வாங்கி விற்க ஆரம்பித்தேன் . இன்னும் விலை குறைப்பு சலுகைகள் ஆகியவற்றைக்கொண்டே கடையை இலாபகரமாக நடத்திக்காட்டினேன்...

இப்பொழுது அடுத்த பிசினஸ் ஆரம்பிப்பது பற்றிய எண்ணமே மேலோங்கியிருக்கிறது...

Behind The Post:

நீங்க எல்லாம் வேலை மிகுதியா இருந்தா ஆணி பிடுங்கிட்டு வர்றேன்னு ஈசியா சொல்றீங்க இல்லையா? அந்த வார்த்தையின் வலியும் கஷ்டமும் அதிகம் அறிந்த காரணத்தினாலோ என்னவோ இதுவரை ஆணி பிடுங்கிட்டு வர்றேன்னு நான் சொன்னதே கிடையாது. இந்த ஆணி பிடுங்குவது ஆணியடிப்பதை (செண்ட்ரிங் ,கார்பெண்டரிங்கை) குலத்தொழிலாக கொண்டவன் நான். எனக்கு ஆணியடிப்பது பிடுங்குவதில் 6 வயதிலிருந்தே அனுபவம், விளைவு ஆணி அடிக்கும் பொழுது சுத்தியல் தவறுதலாக என்னுடைய நகத்தில் பட்டு நகங்களை பல முறை இழந்திருக்கிறேன். ஆணி பிடுங்கும் பொழுது பலகைகளில் நீட்டிக்கொண்டிருக்கும் ஆணியை தவறுதலாக மிதிக்கும் பொழுது போட்டிருக்கும் ஹவாய் செப்பலையும் குத்திக்கிழித்து ஒரு இஞ்ச் உள்ளே சென்று பொதக்கென்றி இரத்தம் எட்டிப்பார்க்கும் அதுவும் இலேசாக துருப்பிடித்த ஆணிகள் செப்டிக் ஆகிவிடாமால் எண்ணையை சுட வைத்து வேது வைப்பது பின் அதுவும் கேட்காவிட்டால் மட்டுமே டாக்டரிடம் செல்வது இதுபோல பல முறை நடந்திருக்கிறது...இதுவரை மட்டுமல்ல இனி எப்பொழுதும் என் வாயிலிருந்து ஆணி பிடுங்கிட்டு வர்றேன் என்பது வராது..

,


Post Comment

விளம்பர யுக்திகள்...

| February 18, 2011 | 99 comments |


பொதுவாக நம் அன்றாடம் பார்க்கும் தொலைக்காட்சி விளம்பரங்கள் சுவாரஸ்யமாக இருந்தால் அந்த விளம்பரம் வரும்பொழுது எல்லாம் சேனலை மாற்ற மனது வருவதில்லை.அதே போல் அன்றாடம் நாம் பார்க்கும் சில கடைகளின் விளம்பரங்கள் அனைத்துமே சிறிது வித்தியாசமாக இருந்தால் அந்த வழி செல்லும்பொழுதெல்லாம் சற்று திரும்பி பார்க்க வைக்கும் ... அது அந்த விளம்பரத்தில் இருக்கும் சிறிய வார்த்தைகளாக இருந்தாலும் அட போட வைக்கும்... என்னன்னு புரியலையா அதாங்க அந்த பஞ்ச் டயலாக்ஸ் எடுத்துக்காட்டா மதுரை தங்கமயில் ஜூவல்லரியின் தங்கம் வாங்க தங்க மயிலுக்கு வாங்க ...புரிஞ்சதா?


அதே போல் நானும் சில கடைகளுக்கு விளம்பரகளுக்கு எனக்கு தோன்றிய பஞ்ச் டயலாக்ஸ் சேர்த்து பார்த்தேன் ரொம்ப நல்லாவெல்லாம் இல்லை ஆனா சுவாரஸ்யமா இருந்தது.. அதை உங்களுடன் பகிர்வதில் எனக்கு மகிழ்ச்சியே... பதிவு பிடித்திருந்தால் இதையே ஒரு தொடராக ஆரம்பிக்கும் எண்ணமும் இருக்கிறது பார்க்கலாம்...Behind The Post...

யாராவது நம்மை ஊக்குவித்தால் போதும்  இன்னும் இன்னும் சிறப்பாக நம்முடைய திறமைகளை வெளிப்படுத்தி நல்ல நிலையை அடையாலாம் அதே போலவே சென்ற மாதம் ஒரு நாள் பதிவர் கவிஞர் தமிழரசி அவர்கள் தன்னுடைய உறவினர் ஒருவருடைய திருமணத்திற்க்கு பேனர்க்காக ஒரு டிசைன் செய்து தரமுடியுமா என்று கேட்டார்கள் . நான் என்னால் அதுமாதிரியெல்லாம் டிசைன் செய்ய முடியாது பழக்கமில்லை என்று கூறினேன் அவர்கள் விடுவதாக இல்லை உன்னால முடியும் நீ பண்ணிக்கொடு அப்படின்னு சொன்னாங்க அத்தோடு இன்விடேசனும் நீதான் டிசைன் பண்ணனும் அப்படின்னு சொல்லிட்டாங்க... அந்த டிசைன்ஸ் கிரியேட் பண்றப்போ அதிலிருந்த வித்யாசம் பார்த்து எனக்கு தோன்றிய ஐடியாதான் இந்த பதிவு உருவாக காரணம்...என்னோட ஒவ்வொரு வளர்ச்சியிலும் இவங்களுடைய பங்கு முக்கியமானது...நன்றி தமிழரசி மேடம் 

அவங்களுக்கு கிரியேட் பண்ணிக்கொடுத்தது பார்க்குறீங்களா?


டிசைன்ஸ் தான் என்னோடது கவிதை அவங்களோடதுதான்...


அனைவருக்கும் நன்றி...


.

Post Comment

காதலெனும் தேர்வெழுதி...

| February 14, 2011 | 95 comments |
             
காதலன் ஒருவனுக்கு அவனுடைய காதலி காதல் தேர்வு நடத்தினால் எப்படியிருக்கும் என்று ஒரு கற்பனை...


தேர்வுக்கு செல்வோமா?


_______________________________________________________________

பாடம் : காதல் இயல் / Lovalogy

பகுதி 1

அ) சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதவும்
ஆ) மதிப்பெண்கள் :5 X1= 5 முத்தங்கள்

காதலி : காதலர் தினம் என்று கொண்டாடப்படுகிறது?

அ) பிப்ரவரி14 ஆ) ஏப்ரல்14  இ) ஆகஸ்ட்15 ஈ) மே1

காதலன் : உண்மையான காதலர் தினம் உலகத்துக்கே தெரியும் ஆனால் எனக்கு நான் உன்னிடம் நீ என்னிடமும் காதலை சொல்லிய 10 ஏப்ரல் 2012 தான் எனக்கு காதலர் தினம்.

காதலி : காதல் கடவுள் யார்?

அ) வாலண்டைன் ஆ) முருகன் இ) மன்மதன் ஈ) ஷாஜகான்

காதலன் : உன் கண்கள்தான் என் காதல் கடவுள்.

காதலி: காதல் சின்னம் எது?

அ) இதயம் ஆ) ரோஜா இ) தாஜ்மஹால் ஈ) கண்கள்

காதலன் : உன்னுடைய அன்பு தான் என் காதல் சின்னம்.

காதலி : அழியா புகழ் பெற்ற சரித்திர காதல் ஜோடி எது?

அ) ரோமியோ-ஜூலியட் ஆ) கோவலன் - மாதவி இ) பரத்-சந்த்யா ஈ) எம்ஜிஆர்-சரோஜாதேவி

காதலன் : நீயும் நானும்தான்..

காதலி: சிறந்த கவிஞர் யார்?

அ)ரஜினிகாந்த் ஆ)வைரமுத்து இ)அந்துமணி ஈ)ராகுல் காந்தி

காதலன் : சந்தேகமே இல்லாமல் உன் அப்பாதான்


பகுதி 2

அ) கோடிட்ட இடத்தை நிரப்புக

ஆ) மதிப்பெண்கள் :5 X1= 5 முத்தங்கள்

காதலி : உன் பார்வையில் நான் __________ , 


காதலன் : ''தேவதை''


காதலி : எனக்கு நீ வைத்த செல்லப்பெயர் __________ ,


காதலன் : ''குட்டிம்மா''


காதலி : நான் உன்னை அழைக்க விரும்பும் செல்லப்பெயர் __________ ,


காதலன் : ''டேய் புருஷா''


காதலி : நம் காதலுக்கு நீ வைத்த செல்லப்பெயர் __________ ,


காதலன் : ''சித்ரவதை''


காதலி : நம் எதிர்கால வாழ்க்கை  ___________ ,


காதலன் : ''அது ஒரு அழகிய நிலாக்காலம்''

பகுதி 3

அ) கேட்கப்படும் கேள்விகளுக்கு இரண்டுவரிக்கு மிகாமல் பதிலளிக்கவும்

ஆ) மதிப்பெண்கள் :5 X2= 10 முத்தங்கள்


காதலி: காதல் என்றால் என்ன?


காதலன் : காதல் என்பது என்னைப்பொருத்தவரையிலும் , ''நீ எனக்கு கிடைத்தால் என் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்பதைவிட உன்னோடுதான் என் வாழ்க்கை'' என்பதாகும்.


காதலி : உனக்கு என்மேல் எப்பொழுது காதல் வந்தது?

காதலன் : யாருக்குத்தெரியும்? நீ எப்பொழுது எனக்குள் வந்தாய் , எப்பொழுது என் வெற்று வாழ்க்கைக்கு வர்ணம் தீட்டினாய் , எப்பொழுது நான் வானத்தில் பறக்கத்தொடங்கினேன் , இன்னும் இதுக்கும் முன் நடந்திராத விசயங்கள் பலவும் எப்பொழுது நடந்தது என்று தெரியாது. ஆனால் எனக்குள் காதல் வந்தது தெரியும், நான் ஒரு அதிசயத்தோடு பேசிக்கொண்டிருக்கிறேன் என்பதும் தெரியும்.

காதலி : என்னைப்பற்றி சிறுகவிதை வரைக..


காதலன் : 


உடம்பில் 
எதாவது ஓர் இடத்தில் 
அலகு குத்தியிருப்பவர்களை 
பார்த்திருக்கிறேன்
முதன் முறையாக
உடம்பு முழுவதும்
'அழகு' குத்தியிருப்பவளை
இப்பொழுதுதான் பார்க்கிறேன்...


காதலி : நமக்கு திருமணம் ஆனால் நடக்கப்போகும் எதாவது ஒரு நிகழ்வை உன்பார்வையில் எழுது..


காதலன் : ஒரு நாள் உன்னுடைய அப்பா ஊருக்கு இருவரும் சென்றிருந்தோம் அங்கு ஒருநாள் இருந்துவிட்டு மறு நாள் நான் என்னோட வேலை காரணமா கிளம்ப வேண்டியிருந்தது , உன்னை உன் அப்பா இன்னும் இரு வாரங்கள் இருந்துவிட்டு போகும்படி சொல்லியிருந்ததால் நீ என்னுடன் வரவில்லை . உன் அப்பா வீட்டை விட்டு நான் கிளம்பும்பொழுது வாசலில் நின்று இந்த ரெண்டு வாரம் எப்படிங்க என்னைபிரிஞ்சு இருக்கப்போறீங்க என்றாய் , நீ இல்லாவிட்டால் என்ன உன்னுடைய வாசம் அன்பு எல்லாத்தையும்தான் நம் வீட்டுக்குள்ளும் எனக்குள்ளும் வைத்து பூட்டிவைத்திருக்கிறாயே அது ஆறுதல் கொடுக்கும் என்றேன்.உடனே வீட்டிற்க்குள் சென்று பெட்டி படுக்கையுடன் நீயும் என்னுடன் கிளம்பிவிட்டாய்.


காதலி : என்னுடைய செயல்களில் பிடிக்காதது எது ? ஏன்?


காதலன் : எனக்கு நீ பரிசு பொருள் தருவது பிடிக்காது. ஏனென்றால் என்னுடைய எல்லா ப்ரியத்தையும் நான் உன் மீது மட்டுமே வைத்திருக்க விருப்பம், நீ பரிசு தந்த பொருள்களுக்கும் அதை பிரித்து கொடுக்க விருப்பமில்லை எனக்கு.


பகுதி 4 

அ) கேட்கப்பட்ட வினாக்களுக்கு சரியான விடையை 10 வரிகளுக்கு மிகாமல் எழுது..
ஆ) மதிப்பெண்கள் :3X10= 30 முத்தங்கள்காதலி : ஒரு காதல் கடிதம் வரைக..


காதலன் :


''ப்ரியமானவளே..''


நலம் நலமறிய ஆவல் என்று வழக்கம்போல் எல்லா கடிதங்களுக்கும் எழுதும் ஆரம்ப வரிகள் உனக்கு கடிதம் எழுதும் பொழுது தோன்றுவதில்லை நீதான் நலமாய் இருக்கிறாயே என்னிடம் பிறகெப்படி அந்த வரிகள் தோன்றும்?.நாம் தினமும் பார்த்து பேசிக்கொண்டிருந்தாலும் மனதில் இருப்பதை சொல்லாக சொல்லிவிடுவதைவிட எழுத்தால் எழுதுவதும் அதை எழுதும்பொழுதும் வரும் பரவசம் ஓடும் நீரில் தன் முகம் பார்க்கும் பறவையின் பரவசத்திற்க்கு இணையாகவும், எழுதி முடித்ததும் மழை பெய்து கொண்டிருக்கும்பொழுதும் தோன்றும் மஞ்சள் வெயில் போல நம்பிக்கையும், கடிதத்தை எழுதி முடித்து ஒட்டும்பொழுது வெடித்து பறக்கும் பஞ்சாய் மனமும் , அதை உனக்கு அனுப்பிவிட்டு காத்திருக்கையில் நீரைவிட்டு தரையில் விழுந்த மீனாய் மனம் துடிப்பது என்று எல்லாமே எனக்கு நரக சுகமாய்த்தானிருக்கிறது அதனாலயே உனக்கு வாரத்திற்க்கு ஒரு கடிதமாவது எழுதிவிடுகிறேன் இந்த வார கோட்டா இந்த கடிதத்துடன் முடிந்தது...நமக்கு திருமணமானாலும் கூட உனக்கு நான் கடிதம் எழுதுவதை நிறுத்தப்போவது இல்லை வர்ட்டா செல்லம்...


                                                                                                      ''ப்ரியமானவன்...''
காதலி : என் கண்கள் பற்றிய சமன்பாட்டை எழுதி விளக்குக..


காதலன் : E=Mc2 என்னடா இது நியூட்டனின் சமன்பாட்டை எழுதியிருக்கிறேன் என்று பார்க்கிறாயா ? விளக்கம் படத்தில் கொடுத்திருக்கிறேன்...


E= Eyes
Mc= McDowell Whisky
என்னடா விஸ்கி பாட்டிலை போட்டிருக்கிறானே என்று பார்க்கிறாயா? உன்னுடைய கண்களை பார்க்கும்பொழுது வரும் போதையைவேறு எப்படி விளக்குவது?
காதலி : நான்கு காதல் கவிதைகள் அழகான படங்களுடன் எழுதவும்...
காதலன்:

Behind The Postநண்பர்கள் அனைவரையும் அன்பர்கள் தினத்தில் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி...காதலர் தினம் என்றதும் அந்த பெயரில் இருக்கும் திரைப்படத்தில் வரும் பாடலான ''காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான்'' என்ற பாடலும் ஞாபகத்தில் வந்து சென்றது.அந்த வரிகளையே கருவாக கொண்டு உருவாக்கியதுதான் இந்த படைப்பு அல்லது காவியம் அல்லது மொக்கை என்றும் கொள்ளலாம்...அனைவருக்கும் காதலர் தின வாழ்த்துகள்...நன்றி..


Post Comment